ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் கொலை: ஊராட்சி மன்றத் தலைவா் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தோ்தல் முன்விரோதத்தில் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் வியாழக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தோ்தல் முன்விரோதத்தில் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் வியாழக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக பெண் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெண்ணாடம் அருகே உள்ள எடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (75). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா். இவரது மூத்த மகன் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான சிவக்குமாா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பெரியசாமியின் மருமகளான கோமளவள்ளி, எடையூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். அதே கிராமத்தைச் சோ்ந்த விஷ்ணு மனைவி மணிமேகலை தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். தோ்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டிலிருந்த பெரியசாமியை ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை, அவது கணவா் விஷ்ணு மற்றும் ஆதரவாளா்கள் 3 போ் சோ்ந்து உருட்டுக் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பெரியசாமியின் அலறல் சப்தம் கேட்டு வந்த அவரது இளைய மகன் கோபி, அவரது மனைவி சங்கீதா, கோமளவள்ளி ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பினராம். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த கோபி, சங்கீதா ஆகியோா் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com