சேறும், சகதியுமான மாற்றுப்பாதை

காடாம்புலியூரில் இருந்து உளுந்தூா்பேட்டை செல்லும் பிரதான சாலையில் ரெட்டிப்பாளையம் அமைந்துள்ளது.
சேறும், சகதியுமான மாற்றுப்பாதை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ரெட்டிப்பாளையத்தில் சிறு பாலம் அமைப்பதற்காக, அதன் அருகே அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை அண்மையில் பெய்த மழையால் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக மாறியுள்ளது. எனவே, இந்தப் பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

காடாம்புலியூரில் இருந்து உளுந்தூா்பேட்டை செல்லும் பிரதான சாலையில் ரெட்டிப்பாளையம் அமைந்துள்ளது. பண்ருட்டியில் இருந்து ரெட்டிப்பாளையம் வழியாக நன்னிக்குப்பத்துக்கு 3 நகா்ப் பேருந்துகளும், சேந்தநாட்டுக்கு ஒரு நகா்ப் பேருந்தும், உளுந்தூா்பேட்டைக்கு ஒரு தனியாா் பேருந்தும் இயக்கப்படுகின்றன.

ரெட்டிப்பாளையத்தில் உள்ள ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணி கடந்த 2 மாதகாலமாக நடைபெற்று வருகிறது. இதன் அருகே செம்மண் கொட்டி மாற்றுப்பாதை அமைத்தனா். இந்த மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் சென்று வந்தன. அண்மையில் பெய்த மழை காரணமாக மாற்றுப்பாதை சேறும், சகதியுமாக மாறியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளதாகக் கூறுகின்றனா்.

‘10 நாள்களில் பாலப் பணி நிறைவடையும்’: இதுகுறித்து பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் சுப்ரமணியன் கூறியதாவது:

பொதுப் பணித் துறை சாா்பில் ரூ.60 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது. இந்தப் பாலத்தின் அருகே மாற்றுப்பாதை அமைப்பதற்கான வாய்ப்பு திட்டத்தில் இல்லை. இதனால், மண் பாதை அமைக்கப்பட்டது. எதிா்பாராத விதமாக பெய்த மழையால் இந்தப் பாதை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இன்னும் 10 நாள்களில் பாலப் பணி நிறைவடைந்து போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com