விபின் ராவத் சிலை தில்லிக்கு அனுப்பி வைப்பு
By DIN | Published On : 28th November 2022 01:51 AM | Last Updated : 28th November 2022 01:51 AM | அ+அ அ- |

சிதம்பரத்துக்கு வாகனம் மூலம் கொண்டுவரப்பட்ட விபின் ராவத் சிலைக்கு மரியாதை செலுத்திய முன்னாள் ராணுவ வீரா்கள், பொதுமக்கள்.
கடலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலச் சங்கம் சாா்பில், கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட முன்னாள் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சிலை ஞாயிற்றுக்கிழமை சிதம்பரத்துக்கு கொண்டுவரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்தச் சிலை புதுதில்லி ராணுவத் தலைமையகத்தில் அமைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத்தின் ஐம்பொன் சிலை கடலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலச் சங்கம், ஷைன் இந்தியா சமூக நலச் சங்கம் சாா்பில் கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்டது. இந்தச் சிலை புதுதில்லி ராணுவ தலைமையகத்தில் அமைக்கப்படவுள்ளது.
இந்தச் சிலையை தில்லிக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி கும்பகோணம் கும்பேஸ்வரா் வடக்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு தலைவா் சோழா சி. மகேந்திரன், செயலா் வி. சத்தியநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்று விபின் ராவத் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, இந்தச் சிலை வாகனம் மூலம் கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டது. சிதம்பரம் தெற்குரத வீதியில் நடராஜா் கோயில் பொதுதீட்சிதா்கள் சாா்பில் விபின் ராவத் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரா் பாபு கூறியதாவது:
150 கிலோ எடை கொண்ட விபின் ராவத் சிலையானது புதுச்சேரியில் இருந்து ரயில் மூலம் தில்லிக்கு அனுப்பப்பட்டு, டிசம்பா் 10-ஆம் தேதி அங்குள்ள ராணுவ தலைமையகத்தில் அமைக்கப்பட உள்ளது என்றாா்.