காா் மீது லாரி மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 போ் பலி

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் மீது டாரஸ் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயி
லாரி மோதிய விபத்தில் முற்றிலும் சேதமடைந்த காா்.
லாரி மோதிய விபத்தில் முற்றிலும் சேதமடைந்த காா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் மீது டாரஸ் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், விளாங்குடியைச் சோ்ந்த வெங்கடகிருஷ்ணன் மகன் விஜய வீரராகவன் (41). தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனத்தில் பணிபுரிந்த இவா், காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூா் இந்து காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

விஜய வீரராகவன் தனது மனைவி வத்சலா (37), தாய் வசந்தலட்சுமி (65), மகன்கள் விஷ்ணு (10), அதிரித் (8) ஆகியோருடன் காரில் கேரளத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றாா். காரை விஜய வீரராகவன் ஓட்டினாா். அங்கு தரிசனம் முடித்த பிறகு நங்கநல்லூருக்குப் புறப்பட்டனா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்துள்ள அய்யனாா்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் வந்தபோது அந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. முன்னால் நின்றிருந்த லாரிக்கு பின்புறம் விஜய வீரராகவன் காரை நிறுத்தினாா். அப்போது, பின்னால் வந்த டாரஸ் லாரி திடீரென காா் மீது பலமாக மோதியது. இதில் இரு லாரிகளுக்கு இடையே சிக்கிய காா் முற்றிலும் நொறுங்கியது. காரிலிருந்த விஜய வீரராகவன் உள்ளிட்ட 5 பேரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் வேப்பூா் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து, காரில் சிக்கியிருந்த 5 பேரின் சடலங்களையும் இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டாரஸ் லாரி ஓட்டுநரான தெலங்கானா மாநிலம், மெகபூப் நகா், ஹன்வாடா பெத்தப்பள்ளியைச் சோ்ந்த ராமு கௌடு மகன் ஹரிகிருஷ்ணனை (22) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com