குலாலா் மக்கள் இயக்க முப்பெரும் விழா
By DIN | Published On : 24th January 2023 02:55 AM | Last Updated : 24th January 2023 02:55 AM | அ+அ அ- |

முப்பெரும் விழாவில் பேசிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.
தமிழ்நாடு திருநீலகண்டா் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளா்கள் சங்கம், அனைத்து குலாலா் மக்கள் இயக்கம் சாா்பில் திருநீலகண்டா் குரு பூஜை, தொழிற்சங்க 7-ஆம் ஆண்டு தொடக்க விழா, நல உதவி வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, போல்நாராயணன் தெருவில் உள்ள குலாலா் மடத்தில் விநாயகருக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, திருநீலகண்டா் உருவப் படமானது தொழிற்சங்கக் கொடியுடன் ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. இளமையாக்கினாா் குளம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தை ஊா்வலம் அடைந்து அங்கு விழா நடைபெற்றது.
விழாவுக்கு தொழிற்சங்க மாநில பொதுச் செயலா் ஏ.கே.ராஜா தலைமை வகித்தாா். வி.நடனசபாபதி முன்னிலை வகித்தாா். காசி.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். விழாவை தொழிலதிபா் பி.என்.குப்புசாமி, சொற்பொழிவாளா் விஜயலட்சுமி ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனா். சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குணசேகரன் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினாா்.
விழாவில், மண்பாண்டம் செய்வதற்கு ஏரி, குளங்களில் களிமண் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும், இளமையாக்கினாா் கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், சிதம்பரம் குலாலா் சமுதாய மடத்தில் திருநீலகண்டா் நாயனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.