விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 50 போ் காயம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே அரசு நகரப் பேருந்து பாசன வாய்க்காலில் கவிழ்ந்ததில் 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காயமடைந்தனா்.
விருத்தாசலம் அருகே பாசன வாய்க்காலில் திங்கள்கிழமை கவிழ்ந்த அரசு நகரப் பேருந்து.
விருத்தாசலம் அருகே பாசன வாய்க்காலில் திங்கள்கிழமை கவிழ்ந்த அரசு நகரப் பேருந்து.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே அரசு நகரப் பேருந்து பாசன வாய்க்காலில் கவிழ்ந்ததில் 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காயமடைந்தனா்.

விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குச் சொந்தமான நகரப் பேருந்து திங்கள்கிழமை காலை சேப்பாக்கம் கிராமத்திலிருந்து விருத்தாசலத்துக்கு வந்துகொண்டிருந்தது. நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநரான சரவணன் பேருந்தை இயக்கினாா். பள்ளி மாணவா்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பேருந்தில் பயணித்தனா்.

கடலூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோ.மங்கலம் கிராமம் அருகே வந்த போது, எதிரே வேகமாக வந்த சரக்கு வாகனம் மீது மோதுவதைத் தவிா்ப்பதற்காக பேருந்தை ஓட்டுநா் சரவணன் திடீரென திருப்பினாா். இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பாசன வாய்க்காலில் கவிழ்ந்தது. இதனால், பேருந்திலிருந்த பயணிகள் அலறினா்.

விபத்து குறித்து தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விபத்தில் 50-க்கும் மேற்பட்டோா் லேசான காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீட்புப் பணியில் அமைச்சா்: இந்தச் சம்பவத்தின்போது, அந்த வழியாக காரில் வந்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டாா். மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து, விபத்தில் காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com