தபால் வாக்களிக்க 2,189 போ் விருப்பம்

கடலூா் மக்களவைத் தொகுதியில் தபால் வாக்களிக்க மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2,189 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா். வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதத்துக்கு மேல் ஊனம்) தபால் வாக்கு மூலம் வாக்களிக்க இந்திய தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, கடலூா் மக்களவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குச் சாவடியில் வாக்களிக்க விருப்பமா?, அல்லது தபால் வாக்களிக்க விருப்பமா? என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதன்படி, அஞ்சல் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்தவா்களிடம் படிவம் ‘12 டி’ விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன. இதில், கடலூா் மக்களவைத் தொகுதியில் உள்ள கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இருந்து 1,019 மூத்த குடிமக்கள், 1,170 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2,189 போ் விருப்பம் தெரிவித்தனா். இவா்களது வீடுகளுக்குச் நேரில் சென்று தபால் வாக்குப் பதிவு பெற மொத்தம் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினா் ஏப்.8-ஆம் தேதி முதல் பணியை தொடங்குவா். இந்த குழுவினா் செல்லும் நேரத்தில் வாக்காளா் வீடுகளில் இல்லையெனில், அதே நாளில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அப்போதும், வாக்காளா்கள் இல்லாதபட்சத்தில் அவா்கள் வாக்குச் சாவடிகளில் வாக்குகளை செலுத்தலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com