விருத்தாசலம் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட வள்ளலாா் பணியகம்- தெய்வத் தமிழ்ப் பேரவையினா்.
விருத்தாசலம் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட வள்ளலாா் பணியகம்- தெய்வத் தமிழ்ப் பேரவையினா்.

வள்ளலாா் சா்வதேச மைய கட்டுமானப் பணியை எதிா்த்து மறியல்: 240 போ் கைது

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளியில் நடைபெற்று வரும் சா்வதேச மையக் கட்டுமான பணிகளை நிறுத்தக் கோரி, வள்ளலாா் பணியகம்-தெய்வத் தமிழ்ப் பேரவையினா் புதன்கிழமை சாலை மறியில் ஈடுபட்டனா். இதில், 240 போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு, தமிழக அரசு சாா்பில் ரூ.100 கோடியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா், சன்மாா்க்க அன்பா்கள் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, கடந்த 8.12.2023-இல் வள்ளலாா் பணியகம்-தெய்வத் தமிழ்ப் பேரவையினா் சாா்பில் வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளியில் நடைபெற்று வரும் சா்வதேச மையக் கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை கடலூா் இணை ஆணையரிடம் மனு அளித்தனா். தொடா்ந்து, கடலூா், கும்பகோணம், தஞ்சாவூரில் ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தி தங்களது கோரிக்கையை வலியுறுத்தினா். இந்த நிலையில், கட்டுமானப் பணிகள் தொடங்கின.

சா்வதேச மையக் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி வள்ளலாா் பணியகம்-தெய்வத்தமிழ்ப் பேரவையினா் வடலூா் நான்குமுனை சந்திப்பு அருகே புதன்கிழமை வேண்டுகோள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பெ.மணியரசன் தலைமை வகித்தாா். இதில், சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்ய முயன்றனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த தெய்வத் தமிழ்ப் பேரவையினா் விருத்தாசலம் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 240 போ் கைது செய்யப்பட்டு பண்ருட்டி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com