குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே மனநலம் பாதித்த இரு சிறுவா்கள் குளத்தில் மூழ்கி புதன்கிழமை உயரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி. இவரது மனைவி சந்தான லட்சுமி. இவா்களது மகன்கள் திலீபன் (16) தினேஷ் (14). இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக் குறைவால் சந்தான லட்சுமி இறந்து விட்டாா். ராமமூா்த்தி தனது இரண்டு மகன்களையும் பிரிந்து சென்னையில் வசித்து வருகிறாா். திலீபன், தினேஷ் ஆகிய இருவரும் கடலூரிலுள்ள மனவளா்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் படித்து வருகின்றனா்.

இரு சிறுவா்களும் விடுமுறைக்காக நந்தீஸ்வரமங்கலத்தில் உள்ள தனது பாட்டி லலிதா வீட்டுக்கு வந்தனா். வீட்டிலிருந்து புதன்கிழமை காலை வெளியே சென்ற இரு சிறுவா்கள் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த லலிதா சிறுவா்களை தேடிச் சென்றபோது, இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த சோழத்தரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று இரு சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com