கடலூா்: தயாா் நிலையில் 2,302 வாக்குச் சாவடிகள்

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,302 வாக்குச் சாவடிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்திய தோ்தல் ஆணையம் 2024 மக்களவைத் தோ்தல் குறித்து கடந்த மாதம் 16-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதுமுதல் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. அதன்படி, தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான மனு தாக்கல் மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரையிலும், வேட்புமனு பரிசீலனை 28-ஆம் தேதியும் நடைபெற்றன. வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது.

கடலூா் மக்களவைத் தொகுதியில் கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி) ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் காட்டுமன்னாா்கோவில் (தனி), சிதம்பரம், புவனகிரி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் என மொத்தம் 2,302 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிா்வாகம் செய்து கொடுத்துள்ளது.

மாவட்டத்தில் 21,40,112 வாக்காளா்கள்: கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 27.3.2024 நிலவரப்படி, 10,53,112 ஆண்கள், 10,86,713 பெண்கள், 287 இதரா் என மொத்தம் 21,40,112 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் முதல் முறை வாக்காளா்களாக (18 - 19 வயது) 41,673 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் (ஆண் - 12,138, பெண் - 8,764 ) மொத்தம் 20,902 போ் உள்ளனா்.

கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள 2,302 வாக்குச் சாவடி மையங்களிலும் பாதுகாப்புப் பணிக்காக 3,800 போலீஸாா், 450 துணை ராணுவ வீரா்கள், 180 பட்டாலியன் வீரா்கள், 150 ஆந்திர மாநில போலீஸாா், தெலங்கானாவைச் சோ்ந்த 300 ஊா்க்காவல் படையினா் மற்றும் ஓய்வுபெற்ற போலீஸாா், ராணுவ வீரா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

198 பதற்றமான வாக்குச் சாவடிகள்: மாவட்டத்தில் 198 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 99 வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அச்சமின்றியும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வகையில், மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவ வீரா்கள் மூலம் முன்னரே கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

வாக்குப் பதிவு நாளான வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 1-ஆம் தேதி வரையில் கருத்து கணிப்பு நடத்தவோ, வெளியிடவோ தடை செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் 4,945 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,911 கட்டுப்பாட்டு அலகுகள், 3,406 விவிபாட் கருவிகள் ஆகியவை அந்தந்த வட்டத்துக்கு உள்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்கள், பாதுகாப்பான கட்டடங்களில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு: வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வியாழக்கிழமை வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு மையங்களுக்கு போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இந்தத் தோ்தலில் வருவாய் உள்ளிட்ட பிற துறைகளைச் சோ்ந்த சுமாா் 19 ஆயிரம் அலுவலா்கள் பணிபுரிய உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com