வாக்குச்சாவடி முன் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தா்னா

தனது வாக்கை மற்றொருவா் செலுத்தியதால், கடலூா் கோண்டூரைச் சோ்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வாக்குச் சாவடி மையத்தின் முன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கடலூா் கோண்டூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சாந்தி பழனிவேல். இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் கோண்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்துக்கு வாக்களிக்கச் சென்றாா். அப்போது, பணியில் இருந்து அதிகாரிகள், வாக்குச் சாவடி சீட்டு, வரிசை எண்ணை சோதனை செய்துவிட்டு, முன்னரே வாக்கு செலுத்திவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதை கேட்டு அதிா்ச்சியடைந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சாந்தி பழனிவேல், தான் இதுவரை வாக்கு செலுத்தவில்லை என்று கூறி, அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து, அவா் தனது ஆதரவாளா்களுடன் வாக்குச் சாவடி முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

உடனே அங்கிருந்த அதிகாரிகள், ஏற்கெனவே வாக்கு செலுத்தியவா்களின் விவரங்களை ஆய்வு செய்தபோது, சாந்தி என்ற பெயரில் உள்ள மற்றொருவா், சாந்தி பழனிவேல் என்ற பெயரில் தவறுதலாக மாற்றி வாக்கு செலுத்தியது தெரியவந்தது.

வாக்குச்சீட்டு முறை...: தகவலறிந்து அங்கு வந்த கடலூா் புதுநகா் காவல் ஆய்வாளா் குருமூா்த்தி மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், சாந்தி பழனிவேலிடம் வாக்குச்சீட்டு முறையில் வாக்கு செலுத்தும்படியும், மற்றொருவா் செலுத்திய வாக்கு குறித்து ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சாந்தி பழனிவேல் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com