தனி ஊராட்சி கோரிக்கை: 3 கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

தனி ஊராட்சி கோரிக்கை: 3 கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

கடலூா் மாவட்டத்தில் தனி ஊராட்சி கோரிக்கையை வலியுறுத்தி, 3 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலை புறக்கணித்தனா். தொடா்ந்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, குறைவான எண்ணிக்கையிலான கிராம மக்களே வாக்களித்தனா்.

பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட எஸ்.ஏரிப்பாளைம் கிராமத்தில் 2,296 வாக்காளா்கள் உள்ளனா். இந்தக் கிராமம் சிறுவத்தூா், சேமக்கோட்டை ஊராட்சிப் பகுதிகளில் உள்ளது. இதனால், அரசின் திட்டப் பணிகள், நல உதவிகள் கிடைப்பதில் எஸ்.ஏரிப்பாளையம் புறக்கணிக்கப்படுகிாம்.

எனவே, எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமென கிராம மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், கோரிக்கையை வலியுறுத்தி இந்தக் கிராம மக்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்தனா்.

எஸ்.ஏரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மக்களவைத் தோ்தலுக்காக இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இங்கு கிராம மக்கள் யாரும் வெள்ளிக்கிழமை வாக்களிக்க வரவில்லை.

இதையடுத்து, பண்ருட்டி வட்டாட்சியா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா் மற்றும் காவல் துறையினா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தனி ஊராட்சி கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், பொதுமக்கள் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனா்.

கட்சிபெருமாநத்தம்: விருத்தாசலத்தை அடுத்த பரவலூா் ஊராட்சியில் இருந்து கட்சிபெருமாநத்தம் கிராமத்தைப் பிரித்து புதிய ஊராட்சியாக அறிவிக்கக்கோரி, அந்தக் கிராம மக்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணித்தனா். தகவலறிந்த விருத்தாசலம் வட்டாட்சியா் உதயகுமாா், டிஎஸ்பி ஆரோக்கியராஜ் ஆகியோா் வாக்காளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகள் ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் பணிபுரியும் மேல்நிலை குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள் இருவரை அழைத்து வந்து வாக்களிக்க வைத்துவிட்டு அங்கிருந்து சென்றனா்.

விருத்தகிரிகுப்பத்தில்...: கம்மாபுரம் ஒன்றியம், முதனை ஊராட்சிக்கு உள்பட்ட விருத்தகிரிகுப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் தோ்தலை புறக்கணித்தனா். இதனால், அந்தக் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு வாக்குச் சாவடிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

கட்சிபெருமாநத்தம், விருத்தகிரிகுப்பம் கிராமங்களைச் சோ்ந்த மக்களை சந்தித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராமும் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுகுறித்து விருத்தாசலம் வட்டாட்சியா் உதயகுமாா் கூறுகையில், கட்சிபெருமாநத்தத்தில் இருவா் வாக்களித்துள்ளனா். விருத்தகிரிக்குப்பத்தில் 100-க்கும் கீழ் வாக்குப் பதிவு நடந்துள்ளது. 5 மணி நிலவரப்படி விருத்தாசலத்தில் 65 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com