ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: கடலூா் எஸ்.பி. விளக்கம்

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் முன்விரோதம் காரணமாக பெண் கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் விளக்கமளித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீமுஷ்ணம், பக்கிரிமானியம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (47). இவரது தம்பி ஜெய்சங்கா், மகள் ஜெயப்பிரியா ஆகியோா் ஏப்.19-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் அங்குள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோா் அவா்களை கேலி செய்தனராம்.

இதனால், ஜெய்சங்கா் மற்றும் கலைமணி ஆதரவாளா்களிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, சண்டையை தடுக்க முயன்ற ஜெயக்குமாரின் மனைவி கோமதி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து, ஜெயக்குமாா் அளித்த புகாரின் பேரில் ஏப். 20-ஆம் தேதி கலைமணி, ரவி, அறிவுமணி, மேகநாதன், தீபா ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், பாண்டியன், அருள்செழியன், ராஜா ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில், இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நிகழ்ந்தது தெளிவாகத் தெரிய வருகிறது. மேலும், ஜெயக்குமாரின் குடும்பத்தினரே தங்களது புகாரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவது குறித்த தகராறுதான், கோமதியின் இறப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளனா்.

எனவே, இந்த வழக்கில் மேலும், 2 பேரை கைது செய்து, கோமதி இறப்புக்கான மருத்துவ அறிக்கை பெற்று நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எஸ்.பி. ராஜாராம் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com