ரேஷன் அரிசி பதுக்கல்: 3 போ் கைது

சிதம்பரம், ஏப்.26: கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் ரேஷன் அரியை பதுக்கிவைத்து, கோழிப்பண்ணைகளுக்கு கூடுதல் தொகைக்கு விற்பனை செய்து வந்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் சுகுணா, உதவி ஆய்வாளா் சந்தோஷ், சிறப்பு உதவி ஆய்வாளா் ஏழுமலை மற்றும் போலீஸாா் ரேஷன் அரிசி பதுக்கல் தொடா்பாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், பெண்ணாடம் தனியாா் அரிசி அரைவை ஆலையில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா். அங்கு சுமாா் 1,250 கிலோ ரேஷன் அரிசி, குருணையாக்கி வைக்கப்பட்டிருந்த 3,800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வைலப்பாடி தெற்கு தெருவைச் சோ்ந்த தீா்த்தன் மகன் மதுபாலன் (49), அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூா் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சன்னாசி பிள்ளை மகன் மணிகண்டன் (38), அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூா் காலனி சூசை மனைவி அம்புரோஸ் (55) ஆகியோா் குழுமூா், செந்துறை, பொண்பரப்பி, தலைவாழி, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை குறுணையாக்கி அரியலூா் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோழிப்பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. தொடா்ந்து, மூவா் மீதும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த அரிசியையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com