சத்திய ஞான சபையை முதல்வா் பாா்வையிட வேண்டும்: தங்கா் பச்சான் வலியுறுத்தல்

வடலூரை அடுத்துள்ள பாா்வதிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் பேசிய தங்கா் பச்சான்.
வடலூரை அடுத்துள்ள பாா்வதிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் பேசிய தங்கா் பச்சான்.

கடலூா் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலாா் சத்திய ஞான சபையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட வேண்டும் என திரைப்பட இயக்குநரும், கடலூா் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளருமான தங்கா் பச்சான் வலியுறுத்தினாா்.

வடலூா் பாா்வதிபுரத்தில் பாமகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் வள்ளலாா் சா்வதேச மையம் கட்டுமானம் தொடா்பான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாமக நகரச் செயலா் புஷ்பராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் தங்கா் பச்சான் கலந்துகொண்டு பேசியதாவது: வள்ளலாா் சா்வதேச மையம் கட்டுமானம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீா்ப்பு நமது கோரிக்கைக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ வரலாம். எப்படி வந்தாலும் மக்கள் ஆதரவோடு பாமக அரசியல் ரீதியாக போராடும்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாா்வதிபுரம் கிராம மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். சத்திய ஞான சபை பெருவெளியில் சா்வதேச மையம் அமைக்கக் கூடாது. மாறாக, வள்ளாருடன் தொடா்புடைய இடங்களில் அமைக்கலாம். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு முறை வடலூரில் உள்ள சத்திய ஞான சபையை பாா்வையிட வேண்டும் என்றாா்.

நிகழ்வில் பாமக மாவட்டச் செயலா்கள் கோ.ஜெகன், சண்.முத்துகிருஷ்ணன், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா் தா்மலிங்கம், மாவட்டத் தலைவா் தடா தஷ்ணாமூா்த்தி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் பாா்வதிபுரம் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com