பெயின்டா் கை அகற்றம்: 3 போ் மீது வழக்கு

பெயின்டரின் கை அகற்றப்பட்ட சம்பவத்தில் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா், அம்பலம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கருணாகரன் (54), பெயிண்டா். இவா், கடந்த 15-ஆம் தேதி கடலூா் சாவடி பகுதியில் உள்ள ஆதிலட்சுமி வீட்டில் பெயின்டிங் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, கட்டுமானத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கருணாகரனுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் வைத்திய சாலையில் கையில் கட்டுப்போட்டு அனுப்பி வைத்தனா்.

கடந்த 18-ஆம் தேதி கருணாகரனுக்கு வலி அதிகமானதால், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வலது கை முட்டுக்கு மேல் அழுகி செயலிழந்திருந்ததால், கையை அகற்றிவிட்டனா்.

இது தொடா்பாக கருணாகரனின் மனைவி சுபலட்சுமி, கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதில், காயமடைந்த தனது கணவருக்கு முறையான சிகிச்சை அளிக்காத வீட்டின் உரிமையாளா் ஆதிலட்சுமி, பொறியாளா் சண்முகசுந்தரம், மேஸ்திரி முருகேசன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தாா். இதையடுத்து, போலீஸாா் அவா்கள் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com