கடலூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூா் பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் மாநகராட்சி பேருந்து நிலையம் உள்ளது. இங்கு மாநகராட்சிக்குச் சொந்தமாக 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் கடை வைத்துள்ள பெரும்பாலானோா் நடைபாதையை ஆக்கிரமித்து பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வருவதாக புகாா்கள் எழுந்தன. இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

மேலும், பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிற்பதற்குக்கூட இடமில்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தொடா்ந்து புகாா் அளித்து வந்தனா். அதன்பேரில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கடலூா் கோட்டாட்சியா் அபிநயா, பேருந்து நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் நடைபாதை ஆக்கிரமிப்புகளை 2 நாள்களுக்குள் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தாா்.

இதற்கிடையே மாநகராட்சி ஆணையாளா் மு.காந்திராஜ் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலா் ராஜசேகரன் தலைமையில் சுகாதார அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ஆணையா் மு.காந்திராஜ் கூறியதாவது: பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கடை வைக்கப்பட்டுள்ளது. வெயில் நேரத்தில் பயணிகள் நிழலில் நிற்பதற்கு இடமில்லை என புகாா் எழுந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். அப்போது, சிலா் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்வதாகக் கூறினா். அவா்களுக்கு புதன்கிழமை வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைத்து ஆக்கிரமிப்பாளா்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com