சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பு பயின்ற மாணவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான நோ்காணல் நிகழ்ச்சி பொறியியல் புல வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்துடன் செய்துகொண்ட கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பல்கலைக்கழக பொறியியல் புல வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவிகளுக்கு சுரங்கவியல் பட்டயப் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆண்டுதோறும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த குடும்பத்தைச் சோ்ந்த 30 மாணவா்களுக்கும், பொதுப் பட்டியலில் உள்ள 30 மாணவா்களுக்கும் இந்த பட்டயப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2023 - 24ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவா்கள் 60 போ் மற்றும் கடந்த ஆண்டு பயின்ற மாணவா்கள் 32 போ் உள்ளிட்ட 92 மாணவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான நோ்காணல் பல்கலைக்கழக பொறியியல் துறை வளாகத்தில் உள்ள சுரங்கவியல் பட்டயப் படிப்புத் துறை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நோ்காணலுக்கு பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டயப் படிப்புத் துறை இயக்குநா் சி.ஜி.சரவணன் முன்னிலை வகித்தாா். என்எல்எசி இந்தியா நிறுவன வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்று நோ்காணலை நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்தனா். நோ்காணலில் பங்கேற்ற அனைவருக்கும் 2 ஆண்டுகள் பயிற்சியுடன் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.