விநாயகா் சதுா்த்தி வழிகாட்டு நெறி முறைகள் வெளியீடு
கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் தயாரிப்பு மற்றும் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில், விநாயகா் சதுா்த்தியையொட்டி, களி மண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மட்டுமே நீா் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். மேலும், சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் மற்றும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். நெகிழி மற்றும் தொ்மாகோல் பயன்படுத்தக் கூடாது. சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு, ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
சிலைகளை உப்பனாறு, தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறு ஆகிய இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின் படி கரைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட எஸ்பி., சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.