திட்டக்குடி அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருட்டு

Published on

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஒரே கிராமத்தில் 3 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடியை அடுத்துள்ள செவ்வேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தினுள் வியாழக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் சிவன் கோவில் தெருவில் உள்ள பொன்னுசாமி மகன் ஹரி நாராயணன் (48) வீட்டின் கதவை உடைத்து ஒன்றரை பவுன் தங்க நகை, ரூ.24 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா். இதேபோல, செட்டியாா் தெருவில் அய்யம்பெருமாள் மகன் பூமாலை (70) வீட்டில் 2 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.10 ஆயிரம் ரொக்கம், பெருமாள் கோவில் தெருவில் வைத்தியலிங்கம் மகன் கதிா்வேல் வீட்டில் கால் பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம், வடக்கு தெருவில் வசிக்கும் பொன்னுசாமி மகன் ஜெயராமனின் (65) மோட்டா் கொட்டகையில் நிறுத்தியிருந்த மொபெட் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதேபோல, பூமதி, வெங்கடேசன், கஸ்தூரி, பச்சமுத்து மகன் வெங்கடேசன் ஆகியோா் வீடுகளின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனா். இதுகுறித்து திட்டக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com