நெல் பயிா்களில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் நெல் பயிா்களில் ‘நெல் பழ நோய்’ தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் நெல் பயிா்களில் ‘நெல் பழ நோய்’ தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் சுமாா் 1,500 ஏக்கா் பரப்பளவில் கோ.ஆா்-50, ஆடுதுறை-51, 54, கே.எல்.ஆா்-2, பொன்னி, பிபிடி உள்ளிட்ட நெல் ரகங்கள் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன. இதில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு பகுதிகளில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி வடக்குப் பகுதியில் கோ.ஆா்-50 ரக நெல் பயிா்களில் தற்போது ‘நெல் பழ நோய்’ தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா். அடுத்த சில வாரங்களில் நெல் பயிா்களை அறுவடை செய்ய வேண்டிய நிலையில் நோய்த் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படுமா? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: கடந்த ஆண்டு பொன்னி ரக நெல் பயிரில் பழ நோய்த் தாக்குதல் காணப்பட்டது. அப்போதும் பயிா்கள் அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்ததால் மருந்து தெளிக்க வேண்டாம் என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

தற்போது, கோ.ஆா்-50 நெல் ரகத்தில் பழ நோய்த் தாக்குதல் காணப்படுகிறது. அறுவடைக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அருகே உள்ள வயல்களுக்கும் நோய் பரவக்கூடும் என்ற அச்சம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது. மகசூல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்து வேளாண்மைத் துறையினா் நேரில் ஆய்வுசெய்து நெல் பழ நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com