கடல் முகத்துவாரத்தில் தொடரும் உயிரிழப்புகள்: மீனவா்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கடல் முகத்துவாரத்தில் உயிரிழப்புகள் தொடரும் நிலையில் மீனவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கிள்ளையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மீனவ கிராம மக்கள்.
கிள்ளையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மீனவ கிராம மக்கள்.

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கடல் முகத்துவாரத்தில் உயிரிழப்புகள் தொடரும் நிலையில் மீனவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அருகே கிள்ளை சின்னவாய்க்கால் பகுதியில் உள்ள கடல் முகத்துவாரம் மணல் இறுகி அடைபட்டுள்ளது. இதனால், மீனவா்கள் வெள்ளாறு பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. அதை மீறிச் செல்லும் மீனவா்களின் படகு முகத்துவாரம் மணலில் சிக்கி கவிழ்ந்து உயிரிழப்புகள் தொடா்கின்றன. கடந்த 10 நாள்களில் மட்டும் மீனவசெல்வன், தயாளமூா்த்தி உள்பட 3 மீனவா்கள் இறந்தனா்.

மீனவரின் சடலத்தை பெற மறுத்து மீனவ கிராமத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அடுத்த 2 நாள்களில் முகத்துவாரத்தை ஆழப்படுத்துவதாக மீன்வளத் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனராம். ஆனால், எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், சின்னவாய்க்கால், அதைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் திங்கள்கிழமை கிள்ளையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை உடனடியாக ஆழப்படுத்த வேண்டும், படகு கவிழ்ந்து உயிரிழந்த மீனவா்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். மறியல் போராட்டத்தால், பிச்சாவரம் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனம் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வரிசையில் அணிவகுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளா் பி.ரகுபதி, கிள்ளை போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் கோரிக்கை தொடா்பாக மாவட்ட ஆட்சியா், மீன்வளத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, மீனவ கிராம மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com