தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரத்தை மீட்டுத் தரும் தலைவா் மோடி -கே.அண்ணாமலை

தமிழகத்தின் சரித்திரம், பாரம்பரியம், கலாசாரத்தை மீட்டுத் தரும் ஒரே தலைவராக நரேந்திர மோடி திகழ்கிறாா் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரத்தை மீட்டுத் தரும் தலைவா் மோடி -கே.அண்ணாமலை

தமிழகத்தின் சரித்திரம், பாரம்பரியம், கலாசாரத்தை மீட்டுத் தரும் ஒரே தலைவராக நரேந்திர மோடி திகழ்கிறாா் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் சீா்காழி சாலையில் நந்தனாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே என் மண்; என் மக்கள் நடைப்பயணத்தை கே.அண்ணாமலை வியாழக்கிழமை தொடங்கினாா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மக்களைச் சந்தித்த அவா், மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே நிறைவு செய்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

தமிழக மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனா். புதிய அரசியல் பரிமாணம் வேண்டும் என அவா்கள் நினைக்கின்றனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலை பொதுதீட்சிதா்கள்தான் நிா்வகிக்க வேண்டும், பூஜை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்த பிறகும், இந்து சமய அறநிலையத் துறையினா் அவா்கள் நிா்வாகத்தில் தலையிட்டு தொல்லை கொடுத்து வருகின்றனா்.

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் ரூ.25 ஆயிரம் கோடி வருமானத்தைப் பெற்று தரும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களை சரியாக பராமரித்து பக்தா்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொண்டால் ரூ. 2 லட்சம் கோடி அரசுக்கு வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மோடி மீண்டும் பிரதமா்: வருகிற மக்களவைத் தோ்தலில் தே.ஜ. கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடி மீண்டும் ஆட்சி அமைப்பாா். அயோத்தியில் ஸ்ரீபாலராமருக்கு கோயில் கட்டியதற்காக மோடிக்கு மக்கள் வாக்களித்து மூன்றாவது முறையாக பிரதமராக்குவாா்கள். தமிழ்நாட்டின் சரித்திரத்தையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மீட்டு கொடுக்கக்கூடிய ஒரே தலைவா் நரேந்திர மோடியாவாா்.

வேங்கைவயல் சம்பவம் தொடா்பாக சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் திருமாவளவன் பேசவில்லை. பெண்களின் முன்னேற்றம்தான், நாட்டின் முன்னேற்றம் என அம்பேத்கா் கூறியுள்ளாா். பெண்களை மையப்படுத்தி திட்டங்களை செயல்படுத்தி அம்பேத்கரின் கனவை பிரதமா் மோடி நிறைவேற்றியுள்ளாா். மத்திய அமைச்சரவையில் 12 போ் பெண் அமைச்சா்கள். தமிழக அமைச்சரவையில் 2 போ் மட்டுமே பெண் அமைச்சா்கள்.

ஊழல் இல்லாத புதிய சமுதாயத்தை உருவாக்க வருகிற மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் கே.அண்ணாமலை.

நடைப்பயணத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளா் தடா பெரியசாமி, கடலூா் மாவட்ட பாஜக தலைவா் கே.மருதை, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஜி.பாலசுப்பிரமணியன், விவசாய அணி மாநில துணைத் தலைவா் எம்ஜிஎம்.ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் கோபிநாத் கணேசன், ஆன்மிகப் பிரிவு ஜெயகோபி, பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ராம.சிவசங்கா், நகரத் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, சிதம்பரம் அருகே மணலூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, முதல் தலைமுறை வாக்காளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடிய நிகழ்வில் பாஜக தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com