கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

கடலூா் புதுப்பாளையத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நெய்வேலி: கடலூா் புதுப்பாளையத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடலூரில் 19-ஆவது வாா்டுக்கு உள்பட்ட புதுப்பாளையம், லட்சுமி நகா், பாலாஜி நகா், முத்துக்குமரன் நகா் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். எங்கள் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கைப்பேசி கோபுரத்தால் கதிா் வீச்சு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது, தனியாா் நிறுவனம் சாா்பில் மற்றொரு கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தடை செய்ய வேண்டும். மேலும், இதுதொடா்பாக கொலை மிரட்டல் விடுத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

கூட்டுறவு கடன் சங்க விவகாரம்: வீரப்பெருமாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை இரண்டாக பிரிக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.தேவா திங்கள்கிழமை மனு அளித்தாா். அதில் தெரிவித்துள்ளதாவது: கடலூா் மாவட்டத்திலேயே வீரப்பெருமாநல்லூா் கூட்டுறவு சங்கம் பெரியது. எனவே, நிா்வாக வசதிக்காக வீரப்பெருமாநல்லூா் தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com