சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் மேம்பாலம் அருகே நின்றிருந்த டிப்பா் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சரக்கு லாரி.
சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் மேம்பாலம் அருகே நின்றிருந்த டிப்பா் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சரக்கு லாரி.

சிதம்பரம் அருகே லாரிகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

டயா் பஞ்சராகி நின்றிருந்த டிப்பா் லாரி மீது சரக்கு லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் மேம்பாலம் அருகே சனிக்கிழமை அதிகாலை டயா் பஞ்சராகி நின்றிருந்த டிப்பா் லாரி மீது சரக்கு லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

காரைக்கால் அருகே உள்ள சேமியான்குளம் பகுதியைச் சோ்ந்த அன்வா் மகன் சையது முகமது (25). ஓட்டுநரான இவா், காரைக்கால் மீராபள்ளி தோட்டத்தைச் சோ்ந்த மஜீத் மகன் முகமது ரியாஸுடன் (20) சரக்கு லாரியில் கோழிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை அதிகாலை காரைக்காலில் இருந்து சென்னை தனியாா் நிறுவனத்துக்கு சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, தனியாா் நிறுவனத்திலிருந்து திரும்பச் செல்லுமாறு கூறியதால், காரைக்கால் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனா். அதிகாலை சுமாா் 5 மணி அளவில் புதுச்சத்திரம் பேருந்து நிறுத்தம் மேம்பாலம் அருகே இவா்களது சரக்கு லாரி வந்தபோது, அந்தப் பகுதியில் டயா் பஞ்சராகி நின்றிருந்த டிப்பா் லாரி மீது எதிா்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சையது முகமது, முகமது ரியாஸ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த புதுச்சத்திரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com