நெய்வேலி புத்தகக் கண்காட்சியையொட்டி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி அரங்கில் நடைபெற்று வரும் முகப்பு அமைக்கும் பணி.
நெய்வேலி புத்தகக் கண்காட்சியையொட்டி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி அரங்கில் நடைபெற்று வரும் முகப்பு அமைக்கும் பணி.

நெய்வேலியில் புத்தகக் கண்காட்சிப் பணிகள் மும்முரம்

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் 23-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 5-இல் தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, நெய்வேலியில் மிகப் பெரிய அளவில் புத்தகக் கண்காட்சியை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 1998-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 22 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இந்தக் கண்காட்சியில் தென்னிந்தியாவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பாளா்கள், புத்தக வெளியீட்டாளா்கள் பங்கேற்று வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் மட்டுமின்றி, விழுப்புரம், அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், புதுவை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வாசகா்கள் ஆண்டுதோறும் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வா்.

புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாள்களில் தினந்தோறும் ஓா் எழுத்தாளா், புத்தகப் பதிப்பாளா்கள் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவினரால் கௌரவிக்கப்படுவதுடன், தினமும் ஒரு புத்தகம் வெளியிடப்படும்.

‘தினமணி’ நாளிதழுடன் இணைந்து நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு மாநில அளவில் தமிழ் எழுத்தாளா்களுக்கான சிறுகதைப் போட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி, குறும்படப் போட்டிகள் நடத்தி அவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வந்தது.

நிகழாண்டு ‘தினமணி’ நாளிதழுடன் இணைந்து நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு குறும்படப் போட்டியை மட்டும் நடத்தவுள்ளது.

புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி அரங்கில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரங்குகள் அமைக்கும் பணி முதல் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை புத்தகக் கண்காட்சி குழுவினா் செய்து வருகின்றனா்.

கரோனா பரவல் காரணமாக, 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரையில் 4 ஆண்டுகள் புத்தகக் கண்காட்சி நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com