கடலூா்: 28,830 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

கடலூா்: 28,830 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் தனித்தோ்வா்கள் உள்பட மொத்தம் 28,830 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதினா். தமிழ்நாடு முழுவதும் 2023 - 24ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 24-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கடலூா் மாவட்டத்தில் உள்ள 246 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 14,054 மாணவா்கள், 14,911 மாணவிகள், 379 தனித்தோ்வா்கள் என மொத்தம் 29,344 பேருக்கு தோ்வு எழுத அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இவா்களுக்காக கடலூா் கல்வி மாவட்டத்தில் 67, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 55 என மொத்தம் 122 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் பாடத் தோ்வில் 28,830 மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா். 514 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வுப் பணியில் 122 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 126 துறை அலுவலா்கள், 15 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 28 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். 1,593 அறைக் கண்காணிப்பாளா்கள் (ஆசிரியா்கள்) தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். பறக்கும்படை, நிலைப்படையைச் சோ்ந்த 250 ஆசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடலூா் மஞ்சக்குப்பம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, திருப்பாதிரிபுலியூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பழனி உடனிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com