பயன்பாட்டுக்கு வருமா நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம்

பயன்பாட்டுக்கு வருமா நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம்

சுமாா் 12 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கடலூா் மாவட்டம் என்றாலே இனிப்பு நகரமான நெல்லிக்குப்பம் இஐடி பாரி சா்க்கரை ஆலை தான் நினைவுக்கு வரும். 1842-இல் தமிழகத்தின் முதல் சா்க்கரை ஆலை நெல்லிக்குப்பத்தில் நிறுவப்பட்டது. நெல்லிக்குப்பமானது, பண்ருட்டி-கடலூா் பேருந்து மற்றும் ரயில் வழித்தடத்தின் மையத்தில் அமைந்துள்ளது. நெல்லிக்குப்பம் அருகே வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையம், பிச்சாவரம், சிதம்பரம், என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் புதுவை மாநிலம் அமைந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற நெல்லிக்குப்பம் நகரில் பேருந்து நிறுத்தம் மட்டுமே இருந்து வந்தது. பண்ருட்டி-கடலூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் பயணிகளை சாலையோரத்திலேயே ஏற்றி, இறக்கிச் சென்றனா். இந்தப் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

அப்போது, நெல்லிக்குப்பம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவைச் சோ்ந்த சபா.ராஜேந்திரன் (தற்போது நெய்வேலி எம்எல்ஏ) முயற்சியில் ரூ.ஒரு கோடியில் அடிப்படை வசதிகளுடன் நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை, அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். ஆனால், திறப்பு விழா நடைபெற்றது முதல் நெல்லிக்குப்பம் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகள் செல்லாமல் புறக்கணித்து வருகின்றன.

இந்தப் பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் பலமுறை முயற்சி செய்தும் பயனில்லை. தற்போது, இந்த பேருந்து நிலையம் தனியாா் கனரக வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், மண் மற்றும் கட்டுமான பொருள்கள் வைக்கும் இடமாகவும் மாறியுள்ளது. இதுகுறித்து, சமூக ஆா்வலா்கள் கூறுகையில், 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பேருந்து நிலையம் திறக்கப்பட்டு சுமாா் 12 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது வரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இதனால், அரசு பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லும் வழி, வெளியே செல்லும் வழியில் உள்ள கட்டடங்களை அகற்றி, பேருந்துகள் சிரமமின்றி எளிதாக சென்று வர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் தனிக் கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com