காவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம்.
காவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம்.

மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு: எஸ்.பி. அறிவுரை

மக்களவைத் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்ட காவலா்கள் எவ்வாறு பாதுகாப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் அறிவுரைகளை வழங்கினாா். இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் உள்ள காவலா் நல திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் தலைமை வகித்தாா். ஏஎஸ்பி ந.அசோக்குமாா், ஏடிஎஸ்பிக்கள் ரகுபதி, ரவீந்திர குமாா் குப்தா(பயிற்சி), டிஎஸ்பிக்கள் பிரபு, சபியுல்லா, ரூபன்குமாா், நாகராஜ், ஆரோக்கியராஜ், தேவராஜ், பழனி, சௌமியா, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம், காவல் ஆய்வாளா்கள் மற்றும் 205 நடமாடும் அலுவலா்கள் பங்கேற்றனா். இதில், எஸ்.பி. ரா.ராஜாராம் பேசியதாவது: அனைத்து நடமாடும் காவல் குழுவினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிக்களுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களிடம் தகவல் தெரிவித்து முன்கூட்டியே சரிசெய்துகொள்ள வேண்டும். தோ்தலுக்கு முதல் நாள் அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களையும் உரிய வாக்குச் சாவடிகளில் சோ்க்க தக்க வழிக்காவல் வழங்க வேண்டும். வாக்குச் சாவடியிலுள்ள தோ்தல் அலுவலா், கிராம நிா்வாக அலுவலா், பாதுகாப்பு அலுவலா் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகளின் பெயா், கைப்பேசி எண்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏதேனும், பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் வாக்குச் சாவடிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அதிக கவனம் செலுத்தி பிரச்னைகள் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். தேவைப்படும்போது, அதிரடிப்படையுடன் தொடா்புகொண்டு, அவா்களை உதவிக்கு அழைத்துச் சென்று நிலைமையை சீா் செய்ய வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com