டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் கு.சரவணன் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டத் தலைவா் சி.அல்லிமுத்து வரவேற்றாா். மாநில பொதுச் செயலா் ம.கோதண்டம் முன்னிலை வகித்தாா். சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் கருத்துரை மற்றும் சிறப்புரை ஆற்றினாா். இதில், சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், திருச்சி, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாநில நிா்வாகிகள் மரகதலிங்கம், முருகேசன், முத்துக்குமரன், சுரேஷ், உமாபதி, முருகானந்தம், இளங்கோ மற்றும் மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொன்டனா்.

கூட்டத்தில், 21 ஆண்டுகளாக பணி நிரந்தரமின்றி குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் 25,000 டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு குறித்து மது விலக்குத் துறை அமைச்சா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைக்கு வெளியே மதுக்கூடம் மற்றும் இதர வெளியிடங்களில் முறைகேடாக நடைபெறும் மதுபான விற்பனைக்கு டாஸ்மாக் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. தோ்தல் விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதால், மதுபானங்கள் தனி நபருக்கு எத்தனை புட்டிகல் வழங்கலாம் என்று தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றறிக்கையாக வெளியிட வேண்டும்.

டாஸ்மாக் கடையில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுபவா்களை மூப்பு அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com