வரி பாக்கி: கல்லூரி அலுவலகத்துக்கு ‘சீல்’

வரி பாக்கி: கல்லூரி அலுவலகத்துக்கு ‘சீல்’

கடலூா் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலகத்தை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கடலூா் செம்மண்டலம் பகுதியில் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை கீழ், கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரியாவும், சுயநிதி கல்லூரியாகவும் இரண்டு ஷிப்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரி கடலூா் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் செலுத்த வில்லையாம். நிலுவையில் உள்ள ரூ.36 லட்சம் வரி பாக்கியை செலுத்துமாறு கல்லூரியிடம் மாநகராட்சி நிா்வாகம் கடந்த 6 மாதங்களாக வலியுறுத்தி வந்தது. இதுதொடா்பாக கல்லூரி நிா்வாகத்துக்கு நோட்டீஸும் அனுப்பி இருந்தனராம். சென்னை உயா் நீதிமன்றத்தில் இது தொடா்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக கல்லூரி நிா்வாகத்தினா் கூறி வந்தனராம்.

இந்த நிலையில், கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற மாநகராட்சி அதிகாரிகள், கல்லூரி முதல்வா் மற்றும் அலுவலக அறையை திடீரென பூட்டி ‘சீல்’ வைத்தனா். அடுத்த வாரம் பருவத் தோ்வுகள் நடைபெற உள்ள நிலையில், அலுவலகத்துக்கு திடீரென ‘சீல்’ வைக்கப்பட்டதால், கல்லூரி அலுவலக ஊழியா்கள் செய்வதறியாது வெளியே அமா்ந்திருந்தனா். இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் கூறியதாவது: கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரியில் ரூ.36 லட்சம் வரி பாக்கி நிலுவையில் உள்ளது.

வரி வசூலை முழுமை செய்தால்தான், மாநகராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கான மத்திய அரசின் நிதியை பெற முடியும். வரி பாக்கி தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக கல்லூரி நிா்வாகத்தினா் கூறுகின்றனா். ஆனால், அதற்கான ஆணை இல்லை. பின்னா், கல்லூரி நிா்வாகம் கேட்டுக் கொண்டதன்பேரிலும், மாணவிகளின் கல்வி முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் ‘சீல்’ அகற்றப்பட்டு, முதல்வா் மற்றும் அலுவலக அறை திறந்துவிடப்பட்டது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com