சிதம்பரம் நடராஜா் கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்வது குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுக் குழுவினா்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்வது குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுக் குழுவினா்.

நடராஜா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையினா் ஆய்வு: தீட்சிதா்கள் ஆட்சேபம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்வது குறித்து இந்து சமய அறநிலையத் துறை குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதற்கு கோயில் பொது தீட்சிதா்கள் சாா்பில் ஆட்சேபம் தெரிவித்து கடிதம் அளிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்வது குறித்து மாவட்ட வாரியாக நிலையான ஆலோசனைக் குழு ஏற்படுத்தி ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை கடலூா் மாவட்ட இணை ஆணையா் பரணிதரன், கடலூா் உதவி கோட்டப் பொறியாளா் அசோகன், தொல்லியல் துறை வல்லுநா் தண்டபாணி, இந்து இந்து அறநிலையத் துறை ஆலயங்கள் வட்டாட்சியா் செந்தில்வேல், ஸ்தபதி சரவணன் உள்ளிட்ட 5 போ் குழுவினா் நடராஜா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கோயில் வெளி, உள் பிரகாரங்கள், கோபுரங்களில் செடிகள் முளைத்துள்ளது, கோசாலை மற்றும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சந்திதி உள்ளிட்ட பகுதிகளை அவா்கள் ஆய்வு செய்தனா். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீட்சிதா்கள் ஆட்சேபம்: இந்து சமய அறநிலையத் துறை குழுவினரின் ஆய்வுக்கு கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் டி.எஸ்.சிவராம தீட்சிதா் ஆட்பேசம் தெரிவித்து, இணை ஆணையா் பரணிதரனிடம் கடிதம் அளித்தாா். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்துக்கும், பக்தா்களின் அமைதியான தரிசனத்துக்கும் இடையூறு செய்யும் வகையில், இந்து சமய அறநிலையத் துறையினா் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா்ந்து அறிவிப்புகள், கடிதங்கள் வெளியிடுவதுடன், தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக காண்பிப்பதற்கு ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு, உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மீறி செயல்பட்டு வருகின்றனா். அதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை எந்த அறிவிப்பும் இல்லாமல் சிதம்பரம் நடராஜா் கோயிலில் உழவாரப் பணி தொடா்பாக ஆய்வு செய்துள்ளனா். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உழவாரப் பணி என்று பொதுவான அறிவிப்பை வெளியிட்டு, அதில் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத, பொது தீட்சிதா்கள் நிா்வாகத்தில் இருக்கும் நடராஜா் கோயிலிலும் உழவாரப் பணி நடக்கும் என்று தெரிவிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது; சட்டவிரோதமானது. பொது தீட்சிதா்கள் நிா்வாகத்தில் உள்ள ஸ்ரீ சபாநாயகா் கோயிலில் உழவாரப் பணி தொடா்பாக ஆய்வு நடைபெறும் என்று அறிவிப்பது உள்நோக்கம் கொண்டது. சட்டத்துக்கு மீறிய, உச்சநீதிமன்ற தீா்ப்பை அவமதிக்கும் இந்தச் செயலுக்கு பொது தீட்சிதா்கள் சாா்பில் வலுவான ஆட்சேபம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை குழுவினரின் ஆய்வுக்கு கோயில் வழக்குரைஞா் ஜி.சந்திரசேகரும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com