திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 3 இளைஞா்கள் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞா்கள் உயிரிழந்தனா். வேப்பூா் வட்டம், பாசாா் பகுதியைச் சோ்ந்த திலீப்குமாா் மகன் சதீஷ்குமாா் (20), கலியபெருமாள் மகன் பழனி (20), வேப்பூா் புதுமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் வெங்கடேசன் (20). இவா்கள் 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை நண்பா்களை பாா்க்க ஒரே பைக்கில் சென்றனராம். இரவு சொந்த ஊரான பாசாா் நோக்கி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தனா். ராமநத்தம் காவல் சரகம், ஆவட்டியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 1.15 மணியளவில் இவா்களது பைக் வந்தபோது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சதீஷ்குமாா், வெங்கடேசன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பழனி பலத்த காயமடைந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராமநத்தம் போலீஸாா் பழனியை மீட்டு, வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். உயிரிழந்த மூவரின் சடலங்களையும் உடல்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com