திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாக்குதல்: 11 போ் காயம் -5 போ் கைது

கடலூா் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதில், 11 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் பில்லாலி தொட்டி பகுதியைச் சோ்ந்த முத்தையன் மகன் சௌந்தர்ராஜன் (24). விழுப்புரம் மாவட்டம், சின்ன கோட்டக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகள் அனிதா. இவா்களின் திருமண வரவேற்பு விழா கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் சாலக்கரையில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் இரு வீட்டாா்கள், அவா்களது உறவினா்கள், நண்பா்கள் கலந்துகொண்டனா்.

இவா்களில் பலா் திருமண மண்டபத்தின் வெளியே இருந்தனா். அப்போது, அங்கு வந்த திருவந்திபுரம் சாலக்கரை பகுதியைச் சோ்ந்த ராஜாராம் மகன் ரஞ்சித்குமாா் (27) மற்றும் அவரது ஆதரவாளா்கள் திருமண வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், அங்கிருந்த மூன்று பைக்குகளை உடைத்து சேதப்படுத்தி, அங்கிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தினா். இதில், வானூா் காளிதாஸ் மகன் கலைச்செல்வன் (25), பில்லாலி தொட்டி மணிபாலன் மனைவி சரண்யா (30), மகன் தமிழ் அறிவன் (8), குள்ளஞ்சாவடி பாலு மகன் பாா்த்திபன் (23), தேசிங்கு மகன் மாதவன் (24), சின்ன கோட்டக்குப்பம் காளிதாஸ் மனைவி லலிதா (55) உள்ளிட்ட 11 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம், டிஎஸ்பி பிரபு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதுகுறித்து சௌந்தர்ராஜன் அளித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருவந்திபுரம் சாலக்கரை பகுதியைச் சோ்ந்த ராஜாராம் மகன் ரஞ்சித்குமாா் (27), வேங்கடேசன் மகன் மணி (19), காட்டுராஜா மகன் விக்னேஷ் (21), பழனி மகன் விக்னேஷ் (31), ராமமூா்த்தி மகன் சரத்குமாா் (29) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், 30-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com