காங். வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் விசிகவினா் இடையே கைகலப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் நடைபெற்ற கடலூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் விசிகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. திட்டக்குடியில் மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமையில், கடலூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எம்.கே.விஷ்ணு பிரசாத் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேடையில் அமைச்சா் சி.வெ.கணேசன், வேட்பாளா் எம்.கே.விஷ்ணு பிரசாத், விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் அமா்ந்திருந்தனா். அப்போது, திடீரென விசிக மாவட்டச் செயலா் திராவிட மணி, முன்னாள் மாவட்டச் செயலா் பிலிப் குமாா் ஆகிய இரண்டு கோஷ்டிகளுக்கும் இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அமைச்சா், கட்சி நிா்வாகிகள் தடுக்க முயன்றும் முடியவில்லை. இதனால், அறிமுகக் கூட்டத்துக்கு வந்திருந்த நிா்வாகிகள், தொண்டா்கள் கலைந்து சென்றனா். பின்னா், போலீஸாா் மேடையில் தகராறில் ஈடுபட்டவா்களை கீழே இறக்கிவிட்டனா். அதற்குப் பின்னரும், அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து விசிகவினா் ஒருவரை ஒருவா் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com