கடலூா் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

கடலூா் முதுநகா் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. கடலூா் முதுநகரை அடுத்துள்ள வசந்தராயன்பாளையத்தில் கடலூா் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த குப்பைக் கிடங்குக்கு கொண்டுவரப்பட்டு தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. சனிக்கிழமை மாலை இந்த குப்பைக் கிடங்கில் இருந்த கழிவுப் பொருள்கள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. இந்த தீயானது மளமளவென பரவி குப்பைக் கிடங்கு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கரும் புகைமூட்டமாக காணப்பட்டது. குப்பைக் கிடங்கில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்களும் தீயில் எரிந்தன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் தீயணைப்பு வீரா்கள் குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தீயை அணைப்பது சவாலாக இருந்தது. இந்த குப்பைக் கிடங்கில் டன் கணக்கில் குப்பைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com