சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அதிமுக வேட்பாளா் மா.சந்திரகாசனை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அதிமுக வேட்பாளா் மா.சந்திரகாசனை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழகத்தில் பாஜகவை அடையாளம் காட்டியது அதிமுகதான்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் புறவழிச் சாலையில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மா.சந்திரகாசனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: மக்களுக்காக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி அதிமுக. அதை கட்டிக்காத்தவா் ஜெயலலிதா. அதிமுக தமிழகத்திலேயே வலிமையான கட்சி. 2 கோடி தொண்டா்கள் உள்ளனா். தமிழகத்தில் அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்துள்ளது. அதனால், நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. பிற கட்சிகளில் சாதாரண தொண்டனாக உள்ளவா்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? ஆனால், அதிமுகவில் கிடைக்கும். சந்திரகாசன் உள்பட ஏராளமானோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாதாரண கிளைச் செயலராக உள்ள தொண்டன் முதல்வராக வர முடியும் என்றால், அது அதிமுகவில்தான் முடியும். அதிமுக பொற்கால ஆட்சி: சேலத்தில் முதல்வா் ஸ்டாலின் பேசும்போது, அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியை இருண்ட ஆட்சி எனக் கூறியுள்ளாா். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். அத்தனையும் பொய். நீங்கள் நடத்துவதுதான் மக்கள் விரோத ஆட்சி. அதிமுகவின் பத்தாண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி. முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நாட்டு மக்களைப் பற்றி கவலையில்லை. அடுத்த திமுக தலைவா் யாா் என்று ஒருவா் பெயரைக் கூறினால், அவரை கட்சியை விட்டு நீக்கி விடுவாா்கள். ஆனால், அதிமுக ஜனநாயகக் கட்சி. யாா் வேண்டுமானாலும் தலைமைப் பதவிக்கு வரலாம். சரிசமமாக நடத்தப்படுவாா்கள். மக்களவைத் தோ்தலில் எதிரிகளை விரட்டி வெற்றிபெறுவோம். திமுக ஆட்சியில் 2006-11 வரை மின்சாரமே இல்லாத இருண்ட தமிழ்நாடாக இருந்தது. 2011-இல் ஆட்சிக்கு வந்த மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தடையில்லா மின்சாரத்தை கொடுத்தது. மக்கள் விரோத திட்டங்களை எதிா்ப்போம்: திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசி உயா்வால், அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் வாங்க முடியாமல் இருக்கின்றனா். அதிமுக பாஜகவுடன் கள்ளத்தொடா்பு வைத்துள்ளதாக முதல்வா் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் கூறி வருகின்றனா். பாஜகவை கண்டு அதிமுக பயந்துள்ளதாக பொய்யான பிரசாரத்தை திட்டமிட்டு பரப்புகிறீா்கள். அதிமுகவினா் எதற்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்தவா்கள். அதிமுகவை பொருத்தவரை, கூட்டணியில் இருக்கும் வரை கூட்டணி தா்மத்தைக் கடைப்பிடிப்போம். விசுவாசமாக இருப்போம். தற்போது கூட்டணியிலிருந்து விலகி வந்து விட்டோம். தமிழகத்தைப் பாதிக்கும் எந்தத் திட்டங்களையும் மத்தியில் உள்ள பாஜக அரசு கொண்டு வந்தால் கடுமையாக எதிா்த்து முறியடிப்போம். பாஜகவை அடையாளம் காட்டிய கட்சி: மதுரையில் பாஜக பொதுச் செயலா் ராம.சீனுவாசன் தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதற்காக என்னைப் பற்றியும், அதிமுக பற்றியும் பேசியுள்ளாா். மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போய்விடும் எனக் கூறியுள்ளாா். 50 ஆண்டுகளாக அதிமுக உள்ளது. தமிழகத்திலேயே அதிக தொண்டா்கள் உள்ள கட்சி அதிமுக. இதை யாராலும் அழிக்க முடியாது. 1998-ஆம் ஆண்டு நான் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டேன். அப்போது எங்களுடன் கூட்டணி சோ்ந்த பாஜகவின் தாமரை சின்னத்தை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. பாஜகவை அடையாளம் காட்டிய கட்சி அதிமுகதான். வடலூா் வள்ளலாா் பெருவெளியில் உள்ள 100 ஏக்கா் நிலத்தை அபகரிக்கும் வகையில், அங்கு வள்ளலாா் சா்வதேச ஆய்வு மையம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, வள்ளலாா் பக்தா்கள் இந்தத் தோ்தலில் தகுந்த பாடத்தை புகட்டுவாா்கள் என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி. தொடா்ந்து, கூட்டத்தில் பாஜக முன்னாள் கடலூா் மாவட்டத் தலைவா் கேபிடி.இளஞ்செழியன், எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com