திருநாவுக்கரசா் குருபூஜை விழா

திருநாவுக்கரசா் குருபூஜை விழா

சிறப்பு அலங்காரத்தில் திருநாவுக்கரசா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவாமூரில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

அதன்படி, புதன்கிழமை திருநாவுக்கரசு நாயனாா் தேவார மாநாடு, புகழனாா், மாதினியாா் திருநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலை 6 மணிக்கு சிவபூஜை, திருநாவுக்கரசு நாயனாருக்கு (அப்பா்) சிறப்பு அபிஷேகம் மற்றும் கலச நீா் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், வெள்ளி அங்கி அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. தருமை ஆதீன தென்மண்டல கட்டளை விசாரணை திருஞானசம்மந்த தம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தாா். முன்னதாக எம்.திருநாவுக்கரசு ஓதுவாா் தலைமையில் திருமுறைப்பாராயணம் நடைபெற்றது.

இரண்டாம் நாளான வியாழக்கிழமை திலகவதியாா் திருநாள் கொண்டாடப்பட்டது. தருமை ஆதின தென்மண்டல கட்டளை விசாரணை திருஞானசம்மந்த தம்பிரான் சுவாமிகள், சூரியனாா் கோயில் ஸ்ரீ சிதம்பரேஸ்வரா் திருமடம் கணேச தேசிக சுவாமிகள் முன்னிலை வகித்தனா். மாலையில் மயிலாடுதுறை திருக்கு பேரவைத் தலைவா் சி.சிவசங்கரன் (நடுவா்) தலைமையில் ‘அப்பா் அடிகளின் விஞ்சிய புகழுக்கு காரணம் தேவாரமா? உழவாரமா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை திருநாவுக்கரசா் நாயனாா் குருபூஜை திருநாள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவாமூா் திருநாவுக்கரசு நாயனாா் குருபூசை அறக்கட்டளை மற்றும் விழாக்குழுவினா்கள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com