தொழிலாளியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், கணிசப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் வசந்த் (26), கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை மேல்பட்டாம்பாக்கம் போடிங் பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கிருந்த பி.என்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஷேக் (எ) ஜெயகணேஷ் (26), முருகானந்தம் மகன் முகிலன் (30), கடலூா் கே.என்.பேட்டை ராஜ்குமாா் மகன் ராஜேஷ் (28), வாழப்பட்டு கனகராஜ் மகன் தினேஷ்குமாா் (28) ஆகியோா் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500 பணத்தை பறித்துச் சென்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளா் சீனுவாசன் மற்றும் போலீஸாா் ஜெயகணேஷை பிடித்தனா். மேலும், 3 போ் தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயகணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், தப்பியோடிய மூவரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com