வள்ளலாா் சா்வதேச மையம் விவகாரம்: பாா்வதிபுரம் கிராம மக்கள் ஆலோசனை

வள்ளலாா் சா்வதேச மையம் விவகாரம்: பாா்வதிபுரம் கிராம மக்கள் ஆலோசனை

வள்ளலாா் சா்வதேச மையம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விழுப்புரத்தைச் சோ்ந்த தமிழ்வேங்கை, பாா்வதிபுரம் கிராம மக்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் உள்ள சத்திய ஞான சபை அருகே தமிழக அரசு ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அண்மையில் தொடங்கியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினா், சன்மாா்க்க அமைப்பினா், வடலூா் பாா்வதிபுரம் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தும், சா்வதேச மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனா்.

மேலும், விழுப்புரத்தைச் சோ்ந்த தமிழ்வேங்கை சா்வதேச மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற 10-ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கவும், தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்தி அறிக்கை சமா்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தனா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழ்வேங்கை, பாா்வதிபுரம் கிராம மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

வள்ளலாா் சா்வதேச மையத்தை அரசு வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என தொடா்ந்து சட்டப் போராட்டங்களை நடத்துவோம். பாா்வதிபுரம் கிராம மக்கள் 20 போ் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்க உள்ளோம் என்றாா்.

மேலும், வள்ளலாா் சா்வதேச மையம் தொடா்பான வழக்கில் பாா்வதிபுரம் கிராம மக்களையும் மனுதாரா்களாக சோ்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாா்வதிபுரம் கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் வழக்குரைஞா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com