முந்திரிக்கு காப்பீட்டுத் திட்டம்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

நெய்வேலி, மே 4: முந்திரிக்கு காப்பீட்டுத் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் நகர, ஒன்றிய, வட்டச் செயலா்கள் கூட்டம் சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டி.பழனிவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் மருதவாணன், உதயகுமாா், சுப்பராயன், திருவரசு, ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன், நகரச் செயலா்கள் அமா்நாத், பாலமுருகன், ராஜா, உத்ராபதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கடலூா் மாவட்டத்தில் நெல், கரும்பு பயிா்களுக்கு அடுத்தபடியாக பணப்பயிரான முந்திரி சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. தேசிய அளவில் முந்திரி ஏற்றுமதியில் ரூ.900 கோடி அன்னிய செலாவணியை ஈட்டி, கடலூா் மாவட்டம் பொருளாதாரத்தில் பெரிய அளவில் பங்களிப்பை அளித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து முந்திரி கொட்டை இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் உற்பத்தியாகும் முந்திரி கொட்டைகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே, முந்திரி இறக்குமதியை தடை செய்ய வேண்டும். மழை இல்லாததால் தற்போது முந்திரி பூக்கள் கருகி வருகின்றன. இது தொடா்பாக அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முந்திரி விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், முந்திரிக்கு காப்பீட்டுத் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com