மே 15-இல் மீன் பிடி விசைப்படகுகள் ஆய்வு

நெய்வேலி, மே 4: கடலூா் மாவட்டத்தில் மீன் பிடி விசைப்படகுகள் வருகிற 15-ஆம் தேதி ஆய்வு செய்யப்பட உள்ளதாக கடலூா் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் ம.யோகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு கடலில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான மீன் பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது.

தடைக் காலத்தில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத அனைத்து வகை மீன் பிடி விசைப்படகுகளும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும். அதன்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள மீன் பிடி விசைப் படகுகள் வருகிற 15-ஆம் தேதி ஆய்வு செய்யப்பட உள்ளன.

ஆய்வின்போது, மீனவா்கள் தங்களது விசைப்படகை தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ் அறிவுறுத்தியபடி உரிய வண்ணம் பூசி படகின் பதிவு எண்ணை தெளிவாக எழுதி கட்டாயம் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். மேலும், படகின் பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள், அவற்றின் நகல்கள் ஆகியவற்றை ஆய்வுக் குழுவிடம் அவசியம் காண்பிக்க வேண்டும். டீசல் எரிஎண்ணெய் பாஸ் புத்தகம், தொலைத்தொடா்பு கருவிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆய்வுக்கு உள்படுத்தப்படாத மீன் பிடி விசைப்படகுகளுக்கான மானிய விலையிலான எரிஎண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகின் பதிவுச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, கடலூா் மாவட்ட விசைப்படகு உரிமையாளா்கள் அனைவரும் தங்களது பதிவு செய்த, பதிவு செய்யப்படாத படகுகளை வருகிற 15-ஆம் தேதி தவறாமல் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com