மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், கோயில் திருவிழா நடத்தத் தடை விதிக்கப்பட்டது.

பண்ருட்டி வட்டம், மேலிருப்பு கிராமத்தின் மையப்பகுதியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசையை அடுத்து வரும் வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் 9 நாள்கள் திருவிழா நடைபெறும். இதில், 9-ஆம் நாள் செடல் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு திருவிழா வருகிற 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவிருந்தது. இந்த நிலையில், திருவிழா கொடியேற்றம், சாகை வாா்த்தல், பிடாரி அம்மன் கோயிலில் இருந்து கலசம் ஜோடித்து எடுத்து வரும் நிகழ்ச்சிக்கான செலவுகளை ஒரு தரப்பினா் தாங்கள் செய்வதாகத் தெரிவித்தனா். இதற்கு மற்றொரு தரப்பினா் பொது செலவினமாக செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனா். இதனால், இருதரப்பினா் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இது தொடா்பான பேச்சுவாா்த்தை பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆனந்தன் தலைமையில், காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் பலராமன் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மேலிருப்பு கிராமத்தைச் சோ்ந்த இருதரப்பு முக்கியப் பிரமுகா்களும் கலந்துகொண்டனா். ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து, கிராமத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், நிகழாண்டு திருவிழா நடத்த இயலாது எனத் தீா்மானிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com