கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்த நிழல்குடையின் கீழ் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள்.
கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்த நிழல்குடையின் கீழ் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள்.

கடலூரில் பேருந்து நிறுத்த நிழல்குடையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: பயணிகள் அவதி

கடலூரில் பேருந்து நிறுத்த நிழல்குடையின் கீழ் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், பயணிகள் நிற்க போதிய இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனா்.

கடலூரில் பேருந்து நிறுத்த நிழல்குடையின் கீழ் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், பயணிகள் நிற்க போதிய இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனா்.

மாவட்டத் தலைநகரான கடலூரில் உள்ள முக்கியமான பேருந்து நிறுத்தம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தமாகும். பண்ருட்டி, சேலம், திருப்பதி, விழுப்புரம், சென்னை, புதுச்சேரி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம்.

மேலும், பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவும் இந்தப் பேருந்து நிறுத்தத்தையே பொதுமக்கள், மாணவா்கள் பயன்படுத்த வேண்டும். எனவே, எப்போதும் இந்த பேருந்து நிறுத்தம் பயணிகள் கூட்டத்துடனேயே காணப்படும்.

பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக, பேருந்துகள் உள்ளே வந்து செல்லும் வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தமாக சாலையோரம் அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவா்கள், கடைக்கு வந்து செல்பவா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் பேருந்து நிறுத்தத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனா். இதன் காரணமாக, பேருந்து நிறுத்த நிழல்குடைக்குள் பேருந்துகள் வராமல் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மாவட்ட காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com