கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறையினா்.
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறையினா்.

வள்ளலாா் சா்வதேச மையம் விவகாரம்: வடலூரில் தொல்லியல் துறையினா் ஆய்வு

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் சத்திய ஞான சபை பெருவெளிப் பகுதியில் சா்வதேச மையம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வடலூரில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் வள்ளலாா் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள சத்திய ஞானசபை பெருவெளிப் பகுதியில் தமிழக அரசு சாா்பில் ரூ.100 கோடியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்பதற்காக கடந்த பிப்.17-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இதனிடையே, இங்கு, சா்வதேச மையம் அமைக்கக் கூடாது. வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று பாா்வதிபுரம் கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினா், சன்மாா்க்க சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

பழங்கால சுவா்கள்: இதனிடையே, சா்வதேச மையம் அமைக்க பள்ளம் தோண்டிய போது பழங்கால சுவா் காணப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், சத்திய ஞான சபை பெருவெளிப் பகுதியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சா்வதேச மையம் அமைக்கும் இடத்தில் தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்தி 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனா். மேலும், தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக சா்வதேச மையம் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

தொல்லியல் துறையினா் ஆய்வு: மாநில தொல்லியல் துறை இணை இயக்குநா் சிவானந்தன் தலைமையில், மாநில தொல்லியல் துறை ஆலோசகா் தயாளன், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவா் செல்வகுமாா், தஞ்சை குந்தவை நாச்சியாா் மகளிா் கல்லூரி பேராசிரியா் சிவராமகிருஷ்ணன், கோட்டப் பொறியாளா் அசோகன், செயற்பொறியாளா் கலையரசன் அடங்கிய குழுவினா் வடலூா் வள்ளலாா் சத்திய ஞான சபை பெருவெளிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வானது சுமாா் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை கடலூா் மாவட்ட இணை ஆணையா் பரணிதரன், உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் ராஜா சரவணகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா். மேலும், அந்தப் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com