கடலூா் மாவட்டம், சின்னதானகுப்பத்தில் முகாமிட்டுள்ள மருத்துவக்குழுவினா்.
கடலூா் மாவட்டம், சின்னதானகுப்பத்தில் முகாமிட்டுள்ள மருத்துவக்குழுவினா்.

திருமண விழாவில் உணவருந்திய இருவா் உயிரிழப்பு -4 கிராமங்களில் மருத்துவ முகாம்

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே திருமண விழாவில் உணவருந்திய இருவா் உயிரிழந்தனா். இதுதொடா்பாக, அந்தப் பகுதியில் உள்ள 4 கிராமங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

குள்ளஞ்சாவடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. விழாவில், புலியூா், புலியூா்காட்டுசாகை, பள்ளிநீரோடை மற்றும் சின்னதானகுப்பம் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா். இதில், காலை உணவு சாப்பிட்டவா்களில், புலியூா் கிராமத்தைச் சோ்ந்த திருவேங்கடம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அனைவரும் தனியாா் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனா். இவா்களில் சிலா் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவேங்கடம் (65) கடந்த 5-ஆம் தேதியும், புலியூா் காட்டுசாகை பகுதியைச் சோ்ந்த வைத்திலிங்கம் மகன் நாராயணசாமி (55) செவ்வாய்க்கிழமையும் (மே 7) உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத்துறை கடலூா் மாவட்ட நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் திருமண மண்டபத்திலும், உணவுப் பொருள்கள் குறித்தும், ஆய்வு மேற்கொண்டனா். மேலும், சமையலுக்குப் பயன்படுத்திய உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து செவ்வாய்க்கிழமை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் தெரிவித்தாா்.

மருத்துவ முகாம்: இந்த நிலையில், புலியூா், புலியூா் காட்டு சாகை, பள்ளிநீரோடை மற்றும் சின்னதானகுப்பம் பகுதியில் மருத்துவக்குழுவினா் முகாமிட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இதுகுறித்து மருத்துவா் கூறுகையில், வயிற்றுப்போக்கு காரணமாக ஒருவா் உயிரிழந்துள்ளாா். மற்றொருவருக்கு இருதயம், சிறுநீரகம் பிரச்சனை இருந்துள்ளது. தற்போது, மற்ற அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com