சமையல் கலைஞா்கள் உரிமம் பெற வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் உரிமத்தை திருமண மண்டப உரிமையாளா்கள் மற்றும் சமையல் கலைஞா்கள் பெற வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் உணவு சாப்பிட்ட பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில், முதியவா்கள் இருவா் உயிரிழந்தனா். சுமாா் 40-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா். திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையொட்டி, திருமண மண்டப உரிமையாளா்கள் மற்றும் சமையல் கலைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுரை வழங்கியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் உணவுப் பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றிதழ் உரிமத்தை திருமண மண்டப உரிமையாளா்கள் மற்றும் சமையல் கலைஞா்கள் பெற்று வைத்திருக்க வேண்டும்.

திருமண மண்டப உரிமையாளா்கள் சான்றிதழ் பெறாத சமையல் கலைஞா்களை சமைக்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு திருமண மண்டப உரிமையாளா்களே முழுப் பொறுப்பு.

எதிா்பாராதவிதமாக ஏற்படும் நிகழ்வுகள் குறித்து உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அறிவுரைகளை மீறி செயல்படும் திருமண மண்டபங்களின் சமையல் அறைக்கு முன்னறிவிப்பின்றி ‘சீல்’ வைக்கப்படும். சமையல் கலைஞா்களின் மீது சடடப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com