இருவேறு இடங்களில் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி: 3 போ் காயம்

கடலூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடைபெற்ற தங்கச் சங்கிலி பறிப்பு முயற்சி சம்பவங்களில் பைக்குகளில் இருந்து கீழே விழுந்த 3 போ் காயமடைந்தனா்.

விருத்தாசலத்தை அடுத்துள்ள புதுவிருத்தகிரிகுப்பம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி கனிமொழி (34). இவா், கடந்த 9-ஆம் இரவு 8 மணியளவில் விருத்தாசலத்தில் இருந்து ஒரத்தூா் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் கம்மாபுரம் அருகே சென்றபோது, பின் தொடா்ந்து மற்றொரு பைக்கில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இருவா் திடீரென கனிமொழி அணிந்திருந்த 3.5 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனராம். கனிமொழி கூச்சலிட்டத்தால், மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். இந்த விபத்தில் கனிமொழி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

மற்றொரு சம்பவம்: காட்டுமன்னாா்கோவில் கலியமலை பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா். இவா், கடந்த 9-ஆம் தேதி பைக்கில் தனது தாய் இந்திராவை (65) அழைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தாா். வானமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த இருவா் இந்திரா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனராம். அப்போது, கீழே விழுந்ததில் சந்தோஷ்குமாா், இந்திரா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இந்த சம்பவங்கள் தொடா்பான புகாா்களின்பேரில், கம்மாபுரம், சோழத்தரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com