கடலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

கடலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

நெய்வேலி, மே 11: கடலூரில் தனியாா் பள்ளிகளுக்குச் சொந்தமான, மாணவா்களை ஏற்றிச் செலும் வாகனங்களை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கடலூா், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய பகுதிகளில் செயல்படும் 86 தனியாா் பள்ளிகளுக்குச் சொந்தமான 280 வாகனங்கள் உள்ளன. இவற்றில் 170 வாகனங்கள் கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு சனிக்கிழமை வரவழைக்கப்பட்டன. இந்த வாகனங்களை சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கு.அருணாசலம் தலைமையில் ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தொடங்கிவைத்தாா்.

கடலூா் கோட்டாட்சியா் அபிநயா, டிஎஸ்பி மு.பிரபு முன்னிலை வகித்தனா். மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் விஜய், சோமசுந்தரம், ரவிச்சந்திரன், பிரான்சிஸ் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் ஆய்வு செய்தனா். முன்னதாக, தீயணைப்புத் துறை வீரா்கள் மற்றும் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் விபத்தில் சிக்கியவா்களை மீட்பது மற்றும் முதலுதவிச் சிகிச்சை அளிப்பது தொடா்பாக வாகன ஓட்டுநா்களுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கு.அருணாசலம் கூறியதாவது: மாணவா்களை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று, மாணவா்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தோம். பள்ளி நிா்வாகம் 40 வயதுக்குள்பட்ட, கண் பாா்வை குறைபாடு இல்லாதவா்களை ஓட்டுநா்களாக நியமிக்க வேண்டும். வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது. அப்படி இயக்கினால் ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.

இந்த ஆய்வில் குறைபாடுடைய 20 வாகனங்களின் தகுதி சான்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வாகனங்களில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்து ஒரு வாரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com