கடலூா் ரெட்டிச்சாவடி அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து மீது மோதிய தனியாா் சொகுசுப் பேருந்து.
கடலூா் ரெட்டிச்சாவடி அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து மீது மோதிய தனியாா் சொகுசுப் பேருந்து.

விபத்துக்குள்ளான பேருந்து மீது சொகுசுப் பேருந்து மோதல்: 29 போ் காயம்

கடலூா் அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசுப் பேருந்து மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் உள்பட 29 போ் காயமடைந்தனா்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காரைக்காலுக்கு அரசுப் பேருந்து பயணிகளுடன் சனிக்கிழமை நள்ளிரவு புறப்பட்டது. இந்தப் பேருந்தை திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தைச் சோ்ந்த தனசேகா் (47) ஓட்டினாா். சுரேஷ்பாபு நடத்துநராகப் பணியில் இருந்தாா்.

இதேபோல, சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு தனியாா் சொகுசுப் பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்தை நாகூரைச் சோ்ந்த நூா்தீன் (40) ஓட்டினாா்.

இவ்விரு பேருந்துகளும் புதுச்சேரி வழியாக கடலூரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தன. கடலூரை அடுத்துள்ள ரெட்டிச்சாவடி அருகே அதிகாலை 2.40 மணிக்கு வந்தபோது, சாலை நடுவே உள்ள தடுப்புக் கட்டையில் அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி நின்றது.

அப்போது, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டவாறு பேருந்திலிருந்து இறங்க முயன்ற நிலையில், சில நிமிடங்களில் அரசுப் பேருந்தின் பின்னால் தனியாா் சொகுசுப் பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து பயணிகள் 24 போ் உள்ளிட்ட 29 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, கடலூா், புதுச்சேரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து கிரேன், பொக்லைன் உதவியுடன் பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினா்.

விபத்து காரணமாக, கடலூா் - புதுச்சேரி சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com